Wednesday, November 11, 2009
மாவீரன் முத்துக்குமார்!!
நீங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய பத்து தமிழர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி முத்துக்குமாருக்கு கொடுப்பீர்களா? ஆமாம் சில நாட்களாகவே முத்துக்குமாரின் நினவுகள் ஏனோ என்னுள் அலைமோதியபடி இருந்தது. அவன் ஒரு சிறந்த லே.அவுட் ஆர்ட்டிஸ்ட். நன்கு எழுதத் தெரிந்த பத்திரிகையாளன்.
உலக சினிமாக்களை விரும்பிப் பார்த்து வந்த இளைஞன். நம் எல்லோரையும் போலவே அரசியல் வாதிகள் மீது கடும் விருப்பு கொண்டவன். எதுவுமே செய்ய முடியவில்லை. நாம் இறந்தாவது இந்த இனத்தைப் போராடத்துண்டுவோமா? என்று தன் உயிரை ஈந்தவன்.
தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் அதை தற்கொலை என்றார். ஸ்டாலின் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அப்படி ஒன்றும் அவன் உணர்ச்சி வசப்பட்டு காதல் தோல்வியிலோ, வறுமையிலோ தற்கொலை செய்து கொள்ளவில்லை. உடலை போராளிகள் ஆயுதமாக்கியது போல அவனும் தன் உடலை ஆயுதமாக்கியவன். உணர்ச்சி வசப்பட்டு சாகிற ஒருவன் அவனது மரணசாசனத்தைப் போன்றதொரு பிரதியை எழுத வாய்ப்பில்லை. சிங்கள காதல் ஜோடிகளையும் காப்பாற்றக் கோருகிற அக்கடிதம் துவங்குவதே அன்பான உழைக்கும் மக்களே என்றுதான். ஆனாலும் அக்கடிதத்தில் சில அரசியல் பிழைகள் நமக்கு இருந்தாலும் இந்த நூற்றாண்டில் தமிழர்களின் அரசியல் நினைவுகளில் மிகச் சிறந்த ஆவணமாகவும் நினைவாகவும் பதிய வேண்டிய பல விஷயங்கள் அதில் உண்டு.
சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவன் தன்னைத்தானே எரித்துக் கொண்ட அந்த கணத்தில் அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாதி எரிந்த கடிதம் ஒன்று இன்னமும் என்னிடம் இருக்கிறது. அதில் முத்துக்குமாரின் வாசனை இருப்பதாக நான் நம்புகிறேன். அவனை எரித்த நெருப்பை ஒரு நினைவாகவேனும் நான் வைத்திருக்கிறேன். அது எவளவு பெரிய ஊர்வலம். பிரமாண்டமான ஊர்வலங்களை நான் கண்டிருக்கிறேன். பெரிய அரசியல் கட்சிகள், பண பத்தோடு பிரியாணியும், பணமும் கொடுத்து மாநாடும் பேரணியும் நடத்துவார்கள். ஆனால் முத்துக்குமாருக்கு திரண்டது தன்னெழுச்சியான கூட்டம். அவன் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு நாளும் அங்கேதான் இருந்தோம் மரணம் ஒரு எழுச்சித் திருவிழாவாக நடந்தது அங்குதான் தோழர்கள் நாடகம் நிகழ்த்தினார்கள். புரட்சிகர பாடல்களைப் பாடினார்கள். சிலர் ஓவியம் வரைந்தார்கள். கண் தெரியாத கலைஞர்கள் சிலர் வந்து சில நிமிடம் புல்லாங்குழல் இசைத்து அஞ்சலி செலுத்தினார்கள். முதிய தாய்கள் அவர்கள் அறியாத அந்த முகத்துக்காக ஒப்பாரிப் பாடினார்கள். அரசியல் வாதிகள் அங்கே நாடகம் ஆடினார்கள். திமுகவின் பாபு என்ற எம்.எல்.ஏ அங்கு தன் பரிவாரங்களோடு வந்த போது கோபமடைந்த இளைஞர்கள் அவர் மீது கற்களை விட்டு அடித்தார்கள். அவர் தப்பி ஓடினார். பழி வைகோ மீது விழுந்தது ஆனால் வைகோவிற்கும் மதிமுகவிற்கும் அத்தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒன்றிலோ முத்துக்குமாரின் தியாகத்தை மதித்திருக்க வேண்டும். அல்லது மௌனமாகவாவது இருக்க வேண்டும். அதை தற்கொலை என்று சொல்லி விட்டு..இன்னொரு பக்கம் அஞ்சலி செலுத்த ஆளனுப்பினால் என்ன நடக்குமோ அதுதான் வி.எஸ். பாபு என்னும் திமுக எம்.எல்.ஏவுக்கு நடந்தது.
சாலையெங்கும் மக்கள் வெள்ளம். ஆமாம் வெள்ளம்தான் அவனது உடலை எடுத்துச் செல்ல ஊர்வலம் புறப்பட்ட போது தென்னெழுச்சியாக ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டிருந்தார்கள்.மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். வட இந்திய மார்வாடிப் பெண்கள் தண்ணீர் கொடுத்தார்கள். மலரஞ்சலி செலுத்தினார்கள். வழியெங்கும் உடல் நிறுத்தப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் திமுக, அதிமுக, மதிமுக, சிறுத்தைகள், உள்ளிட்ட எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அல்ல. தமிழகத்தில் எழுந்துள்ள புதிய அலையை மக்கள் சக்தியாக மாற்றவோ, மக்களிடம் கொண்டு சேர்ந்து புதிய வழிகளில் போராடவோ தலைமை இல்லை என்பதை தமிழ் மக்களுக்கு பறைசாற்றியவன் முத்துக்குமார் அல்லவா? அந்த வேதனைதான் அங்கே பெருந்திரள் எழுச்சியானது. ஆனால் இந்த எழுச்சியை சிதைத்தவர்கள் யார்? முத்துக்குமாரை புதைத்தவர்கள் யார்?
திருமா அப்போது திமுகவோடு அனுசரணையோடு இருந்தார். ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் பதவியை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெ வோடு இருந்தார். முத்துக்குமாரோ தன் மரணசாசனத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களும் வழக்கறிஞர்களும் தன் பிணத்தைக் கைப்பற்றி போராட்டத்தை கூர்மையாக்குங்கள் என்று கோரியிருந்தான். அப்பா எவ்வளவு துல்லியமான கணிப்பு இந்த ஓட்டுப் பொறுக்கிகளால் எதையுமே செய்ய முடியாது என்பதை தீர்க்கதரிசனமாய் புரிந்து கொண்டு வழக்கறிஞர்களையும் மாணவர்களையும் போராடத்தூண்டுங்கள் நான் என் பிணத்தைத் தந்திருக்கிறேன் என்கிற வீரம்.
ஆனால் முத்துக்குமாரின் பிணத்தை அன்றே புதைக்க நினைத்தவர்கள்தான் மேலே குறிப்பிட்டுள்ள அரசியல்வாதிகள். முத்துக்குமார் கடைசியான மருத்துவர் ராமதாசுக்குச் சொந்தமான பெண்ணே நீ இதழில் வேலை பார்த்தான். ஆனால் ராமதாசின் வேண்டு கோளுக்கிணங்க ஊடகங்களுக்கு தொலைபேசிய அவரது கைத்தடிகள் அவர் பெண்ணே நீ இதழில் வேலை செய்கிறார் என்ற செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். முத்துக்குமாரின் மரண சாசனத்தில் ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத அரசிலை தோலுறுத்தி வரிகள் அங்கே வாசிக்கப்படுவதை வைகோ விரும்பவில்லை. கருணாநிதியின் வரிகள் வாசிக்கப்படுவதை திருமா விரும்பவில்லை, காங்கிரசின் யுத்தக் குற்றங்களையோ சோனியாவையோ விமர்சிப்பதை ராமதாஸ் விரும்பவில்லை. இப்படி முத்துக்குமாரின் மரணசாசனத்தை இருட்டடிப்பு செய்து விடலாம் என்று நினைத்தவர்கள்தான் முத்துக்குமாரின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் கண்ணீர் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.
மாணவர்களும் வழக்கறிஞர்களும் வந்து மரணசாசனத்தைக் காட்டி பிரச்சனை செய்த பிறகுதான். பெயரளவுக்கு ஒதுங்கினார்கள் அரசியல் வாதிகள். ஆனால் பின்னாலிருந்து முத்துக்குமாரின் உறவினர்களை தூண்டி விட்டு மாணவர்களையும் வழக்கறிஞர்களையும் கட்டுப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு முத்துக்குமாரின் உடலை தமிழகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்ற வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அவரது உறவினர்கள் அதற்கு மறுத்து விட்டனர். காரணம் இந்த அரசியல்வாதிகள். ஊர்வலம் சென்று கொண்டிருந்த போதே இப்போராட்டம் பெரும் நெருப்பாய் மாறியது. அடுத்த சில மணிநேரங்களில் தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் காலவரையறையற்று மூடியது கருணாநிதி அரசு.
ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிய போது கல்லூரிகளை மூடிய செய்தி மாணவர்களுக்கு எட்டிய போது ஆக்ரோஷமடைந்த அவர்கள் முத்துக்குமாரின் உடலோடு சாலையிலேயே அமர்ந்தனர். உடலை திருப்பி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்வோம் என்று ஆக்ரோஷமாக கிளம்பினார். ஆனால் மாணவர்களைத் தாக்கி முத்துக்குமாரின் உடலை வேக வேகமாக சுடுகாட்டிற்குக் கொண்டு சென்றவர்கள் யார் தெரியுமா? இன்று ராஜபட்சேவுக்கு பொன்னாடை போர்த்தினார் அல்லவா? அந்த திருமாவளவனின் அடிப்பொடிகள்தான். சுடுகாட்டில் ஒரு மேடை அந்த மேடையில் முதல் ஆட்களாக இந்த ஓட்டுப் பொறுக்கித் துரோகிகள் ஏறி அமர்ந்து கொண்டனர், மாணவர்களும் வழக்கறிஞர்களும் வெறுத்துப் போய் கலைந்தனர்.
முத்துக்குமார் மூட்டிய தீயை ராமாதாசும், வைகோவும், திருமாவும், நெடுமாறனும் சேர்ந்தே நீரூற்றி அணைத்தனர். கருணாநிதியோ அதை மணம் மூடி புதைத்தார். முத்துக்குமார் இன்று ஒரு நினைவாக மட்டுமே வேதனை கலந்த நினைவாக மட்டுமே நம்மிடம் இருக்கிறான். ஆனால் அவன் மூட்டிய நெருப்பு அணைந்தும் அணையாமலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.
ஈழத் தமிழர் போராட்டம் தொடர்பாக உங்களுக்கு தமிழகத் தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். பிடித்தவர், பிடிக்காதவர், வேண்டியவர்,. வேண்டாதவர், இப்படி…. ஆனால் நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? கருணாநிதி ஈழ மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்? என் சொல்படி நடக்கும் ஆட்சியமைந்தால் தனி ஈழம் பெற்றுக் கொடுப்பேன் என்றார் ஜே. போரே நடக்கவில்லை என்றார் கருணாநிதி. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்றார் கருணாநிதி. ஒருவர் பதவியை பெற வாக்குறுதிகளை வீசுகிறார். இன்னொருவர் பதவியைப் பெற பொய்யைச் சொல்கிறார். ராமதாஸ், வைகோ, திருமாவளவன் இவர்களுக்கும் இதே வகையாராக்கள்தான். நான் ஈழத்திற்காக போராடுவேன் நீங்கள் எனக்கு எம்.பி பதவியும் எம்.எல்.ஏ. பதவியும் தர வேண்டும். மக்கள் அம்மாதிரி வெற்றி எதையும் தராவிட்டால் ஈழத்தமிழனாவது மசுராவது……. அதாவது இந்த தமிழகத் தாய் என்ன சொல்கிறாள் தெரியுமா? நான் குழந்தைக்கு முலைப்பால் கொடுக்கிறேன். எனக்கு நீ தங்கச் சங்கிலும் பட்டுப் புடவையும் தரவேண்டும். ஆமாம் நண்பர்களே… இப்போது சொல்லுங்கள் உங்கள் மனங்களில் பத்து சிறந்த தமிழர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை முத்துக்குமாருக்கு ஒதுக்குவீர்களா
Subscribe to:
Post Comments (Atom)
இல்லை நண்பரே இல்லை. உங்கள் கேள்விக்கு இல்லை என்றுதான் பதிலளிக்க என்னால்முடியும்.
ReplyDeleteஏன் தெரியுமா? இவ்வளவுக்கு படுசாதாரணமாக பத்தில் ஒன்றாக்கி அவனைக்கேவலப்படுத்த யான் விரும்பவில்லை.வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு அவன் இந்த முடிவை எடுத்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல் அவன் பத்தோடு பதினொன்றுதான். எவ்வளவு தீர்க்கமான சிந்தனை.இது இந்த உலகின் கோடிக்கணக்கான தமிழர்களில் ஏன் யாருக்குமே வரவில்லை? தன் உடலுக்குமட்டுமா அவன் தீவைத்தான்? அனைத்துத்தமிழர் மனங்களிலெல்லாம் அதைப்பரவும்படியல்லவா செய்துவிட்டான்?
அவன் கோடிகளில் ஒருவன்!