Saturday, May 1, 2010

மே தின வாழ்த்துக்கள்...


19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் வரைமுறையற்ற சுரண்டலுக்கு உள்ளாகி ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேல் வேலை என்று வாட்டிவதைக்கப்பட்ட முறைக்கு எதிராக எட்டு மணி நேரம் வேலை , எட்டு மணி நேரம் சமூகம் குடும்பம், எட்டு மணி நேரம் உறக்கம் என்னும் நோக்கத்தை முன்வைத்துபோராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1886-ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு இதே கருத்தை முன்வைத்து சிகாக்கோ வீதிகளில் இறங்கியது. தொழிலாளர்கள் பெரும் வேலை நிறுத்தங்களையும், பலஇலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற பேரணிகளையும் நடாத்தினர். இதைப் பொறுக்கமுடியாத அமெரிக்க முதலாளித்துவம் காவல்துறையை பயன்படுத்தி துப்பாக்கிகுண்டுகளால் பலரைக் கொன்று குவித்தது. இதுவே தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து நடாத்திய பேரெழுச்சியான போரட்டமாகும். இதன் பிறகு பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர்கள் கூட்ட‌த்தில் சிகாக்கோ வீதிகளில் தொழிலாளர்கள் இரத்தம் சிந்திய நாளான மே முதலாம் திகதியை சர்வதேசதொழிலாளர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுவது என முடிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 1 சர்வதேச தொழிலாளர்தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல் மே 1 தினத்தைக் கொண்டாடியவர் தோழர் சிங்காரவேலர்தான். முதலில் உரிமையிழ‌ந்து வரும்தொழிலாளர் வர்க்கத்திற்கு எனது மே தின வாழ்த்துக்கள்.

புதிய உலகமயமாக்கல் மே தினத்தின் தேவையை அதிகமாக்கிக் கொண்டே போகின்றது. மேதினம் என்கிற முதலாளித்துவ‌ எதிர்ப்பு நாளை இன்று தொழிலாளர்களைத் தாண்டி, ஒடுக்கப்படுகிற ஒவ்வொரு வர்க்கமும் உரிமைகளுக்காக போராட ஒரு குறியீடாகப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. புதிய வடிவம் கொண்டுவரும் வல்லாதிக்கம் இன்று தொழிலாளிவர்க்கம் என்று வருவது இல்லை. தேசத்தை தேடி, தேசிய இனங்களை விழுங்கி தங்களின் வல்லாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. தேசம் கடந்த சர்வதேச பாட்டாளி வர்க்கப் போராட்டங்கள் சேர்ந்து இறைமையைப் பாதுகாக்க முடியாது. இது நடைமுறை சாத்தியமற்றதும் ஆகும். ஒவ்வொரு இனமும் தன் இறைமையைப் பாதுகாத்துக்கொள்ள தானே முன்வந்து தன் சூழலுக்கேற்ற போராட்டங்களை வடிவமைக்க வேண்டும். இப்போதைய பொதுவுடைமை நாயகர்களான கியூபாவும் ,சாவேஸும் தமிழ் ஈழத்தில் எல்லையற்ற மனித உரிமை மீறல்களை மேற்க் கொண்ட சிங்கள அரசுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டர்கள். இதன் மூலம் அவர்கள் சொன்ன செய்தி என் நாட்டு நலன் தான் எனக்கு முதன்மை, சேகுவேரா பேசிய தேசிய இனவிடுதலையை நாங்கள் பேசவில்லை. எங்கள் நாட்டு நலனை தாண்டி நாங்கள் சிந்திக்கமாட்டோம் என்பதுதான். ஆகவே நமக்காக நாம்தான் போராடவேண்டும்.

இன்று பல பொதுவுடைமை இயக்கங்கள் தமிழர்களிடம் சர்வதேச பாட்டாளிவர்க்கம்பற்றி பேசி வருகின்றன. இவர்களுக்கு தமிழ் நாட்டு பாட்டாளியை விட சர்வதேசபாட்டாளிதான் மிகவும் முக்கியம். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளைக்கூடப் பேசக்கூடது. பேசினால் அது மலையாளப் பாட்டாளிவர்க்கத்தையும், கர்னாடகப் பாட்டாளி வர்க்கத்தையும் பாதிக்குமாம். இதைத்தான் புரட்சிகர பொதுவுடைமைஇயக்கங்கள் முன்வைக்கின்றன. தமிழ்நாட்டில் வேலை இழப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. காவிரியால் வளம்பெற்று வந்த 12 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி அதில் வாழ்ந்தவிவசாயத்தொழிலாளர்கள் திருப்பூர் , சென்னை என்று இடம்பெயர்ந்து கூலித்தொழிலாளர்களாக‌ ஒரு நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டு ஆற்று நீர் உரிமையை வலிந்து பறித்து வரும் கன்னட‌துக்காரனுக்கும், மலையாளிக்கும் உச்சநீதி மன்றம் வரை அதிகாரம் விரிந்து கிடக்கிறது. எச்சம்சொச்சமாக இருந்து வேளாண்மை தொழில் செய்யும் விவாசயிகளுக்கு விலை நிர்ணய உரிமை இல்லை.பாரம்பரியமாக பயன்படுத்தும் விதைகளைப் பயன்படுத்துவதற்கும் தடைச்சட்டம். இதையும் தாண்டி தமிழனின் காணிகளைக் குறைந்த விலையில் அபகரிக்கும் மலையாளிகள் மற்றும் மாற்றார்கள். சொந்த நாட்டுக்குள்ளே தமிழனுக்கு வீடு இல்லை என்று அறிவிக்கும் மார்வாடிகள். தமிழனின் அனைத்து தொழில் வளங்களையும் அபகரிக்கும் அந்நியர்கள்.இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இனத்தை சூழ்ந்து நிற்கின்றன தமிழ்நாடில். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மறந்தும் இதை பேசாமல் தவிர்த்துவருகின்றனர். அதிகபட்சமாக மக்கள் கிளர்ந்தெழும்போது பிரச்சினை தங்களைக் கடந்து வெற்றி பெற்றிடாமல் இருக்க ஒரு அறிக்கையையும் ஒரு கூட்ட‌த்தையும் நடாத்தி வெற்றி பெருமிதம் கொண்டாடுகிறார்கள். இதை பார்த்து கிளர்ச்சிகொள்ள வேண்டிய தமிழ் இளைஞர்கள் ரசிகர்மன்றங்களிலும், அரசியல்கட்சிகளிலும், சாதி அரசியலிலும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் வெறிகொண்டும் தங்களை இழந்து கிடக்கிறார்கள். இதனால் மேலும் மேலும் வேகமாக தமிழ் நாடு தமிழர்களிடம் இருந்து பறிபோகிறது. இவற்றிலிருந்து இருந்து விடுபட்டு உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பாகவும் துணையாகவும் இருக்கவேண்டிய தமிழ்நாட்டு தமிழர்கள் சுய உணர்வின்றி இருப்பது தமிழ் இனத்துக்கே பெரும் கேடாகும். இதையும் தாண்டி ஒரு தமிழன் தன் இன உரிமையை பேசினால் அதை தீவிரவாதமாக்கி ஆளுமையை நிலைநாட்ட ஆதிக்கவர்க்கம் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறது.

இன்று உரிமைகளுகாகப் போராடும் நாள். இந்த நாளில் நாம் ஒருசூழுரையை ஏற்கவேண்டும். தமிழர்களுக்கு விடிவுகொடுக்கும் ஓரே தீர்வு தமிழ்தேசியம்தான். இன்று தமிழினம் சந்திக்கும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் சுரண்டலில் இருந்தும் வெளிவர இதுவே தீர்வாகும். தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் வளர்க்கப்பட்டு இருந்தால் ஈழப்போராட்ட‌த்தை தோழில் சுமந்து நடத்தி இருப்பார்கள். தமிழ்தேசிய அரசியல் வெற்றிடம் நிரப்பப்படவேண்டும். தமிழ் நட்டில் ஒரு சாரர் தமிழ்ஈழம் வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் தேவை இல்லை எனும் போலி அரசியல் உடையணிந்து நடமாடுகிறார்கள். இது ஒரு உறுதியற்ற ரசிகத்தன்மையுள்ள ஆதரவுக்கூட்டம். தமிழ் நாட்டு உரிமைகளை பேசிக் களம் காண்பவன்தான் தமிழ்ஈழத்திற்கு உறுதியான பற்றுள்ள தோழனாக இருக்க முடியும். இந்திய தேசிய முகமூடியை அணிந்துகொண்டு ஈழத்தை ஆதரிப்பது ஒரு ஆபத்தான ஆதரவு .எப்போதும் மாறக்கூடியது. தமிழ் நாட்டின் தமிழ்தேசியமும் தமிழ் ஈழவிடுதலையும் கைகோர்த்து நிற்கவேண்டிய காலம் வந்துவிட்டது. இனி இது இரண்டும் வேவ்வேறானவை அல்ல. சர்வதேச பாட்டாளிவர்க சிந்தனையைவிட இனம் ஒன்றுபடுதலுக்கும் தன் உரிமைக்காக சேர்ந்து போராடுவதற்கும் நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன். இந்த விசயங்களை ஆய்வாளர்களும் அரசியல் அறிஞர்களும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..

தோழர் சிவா...

No comments:

Post a Comment