Thursday, February 4, 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02

பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?

போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)

உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!
இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)
ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்
மார்பிளந்த நீயன்றோ மன்! (13)

மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்
உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய
துய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்
கைய! எமக்குநீ காப்பு! (14)


காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்
கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை
பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)
உற்றதுணை ஆனாய் உவந்து! (15)

உவமையொன்(று) இல்லா உயர்கோனே! நீயே
உவமையுனக்(கு) என்றே உணர்ந்தோம் –உவட்டா*
இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்
இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (16)


என்று பிறந்தகுடி என்ப(து) அறியாமல்
இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றா*த்
தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே
அமிழ்தினும் மிக்க அரிது! (17)

அரிதரி(து) உன்போல் அடலேறைக்* காணல்;
அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது
கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);
உள்வைத்தோம் உன்னை உவந்து! (18)

உவரி* நடுவே உதித்த தமிழர்
உவலை*க் கடலில் உழலும் –அவலம்
களையப் பிறந்த கரிகாலா! உன்னை
அளைய*ப் புகுமெம் அகம்! (19)

அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்
பகைகொண்ட மாணார்*ப் பரிசை -அகம்கொண்ட
மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி
ஏந்திப் பிடித்தாய் இயன்று! (20)

குறிப்பு:
கார் -மழைமுகில்
உலங்குவானூர்தி -ஹெலிகாப்டர்
மன்னுதல் –நிலைத்தல்; உன்னுதல் –உணர்தல்; துய்ய -தூய்மையுள்ள
உவட்டா -அருவருப்பில்லாத
பொன்றாத -அழிவில்லாத
அடலேறு –வலிமையுடையவன்; கோ -அரசன்
உவரி –கடல்; உவரிநடுவே உதித்ததமிழர் –இலங்கைத்தமிழர்; உவலை –துன்பம்; அளைதல்- தழுவுதல்
மாணார் –பகைவர்; பரிசு –பண்பு.

--

அன்புடன்


அகரம்.அமுதா

நன்றி
http://www.vannionline.com/

No comments:

Post a Comment