Friday, January 29, 2010

முத்துக்குமரா வீரவணக்கம்

தாகச் செந்தீயால்
தம்மையெரித்த
தியாகத்தில்
தமிழன் உள்ளத்தில் இனத்
தீயை மூட்டிய
எம் இனக்குமாரா
முத்துக்குமரா
வீரவணக்கம் வீரவணக்கம்!...
இனம் உள்ளவரை
உன் அயுதம் எம்கைகளில்...



ஈழத்தில் துயருற்ற
எம்உயிர்கள் எண்ணிக்கையற்று
மடிந்தபோது
தாய்மடியாய் துடித்தோமே
தமிழகத்தில்...


முதுகொடிந்து முகம் கூனி
நானிய எம்மினத்தை
நயவஞ்சக கூட்டத்தார்
நாவன்மை கொண்டும்
ஆட்சியென்றும் அரசியலென்றும்
அதிகாரத்தால்
நைத்தபோது
நசிந்து நசிந்து
நிராயுதபாணியாய் நின்றும்
தாய்மடியாய் துடித்தோமே
தமிழகத்தில்...



இனம் காக்க
இவ்வுயிரும் துட்சமென
துனிந்த
உன் உயிர்க்கொடையால்
உயிராயுதம் கொடுத்தாய்
ஏந்தி நிற்கின்றோம்....



நீ எம் வழிகாட்டி
முன்னமே
விடுதலைபெற்றாய்
எங்கள்
விடுதலைக்கு விதையாய்...

ஆம்.
எம்மக்களை
கொத்துக் கொத்தாய்
கொலைசெய்ய
கொள்கைவகுத்த
கொலைகார தில்லியோடு
இனியும் குலவி வாழமுடியுமோ?
முடியவே முடியாது...


அரம்பர்களாய்
ஆலை முதலளிகலாய்
அரசியல்வாதிகள்.
இவர்களால் அமுங்கிபோவதா
எம் தலையெழுத்து?
முடங்கி முடங்கி
அடங்கியதால்
அடிமையானோம் அறியாமல்!...

தமிழ் நிலத்தில்
உயிர்காத்த காவிரியும்
உறவாடிய முல்லைப்பெரியாரும்
இழந்தோம்...

ஒப்புயர்ந்த வணிகத்தை
உயிர்நிகர் தாய்நிலத்தை
உரிமைகோரும் அந்நியர் பார்...
அடிமையானோம் அறியாமல்!...



இனியும் வேறென்ன வேலை
உன் அயுதத்தை
கூர்தீட்டி கூர்தீட்டி
ஏந்துவோம்
செந்தமிழ் நாடே! ...

எம் விடுதலைத் தாகம்
தீரும்வரை !...

Sunday, January 24, 2010

விடுதலையை விரைவாக்குவோம்...!!! இதுவே எம் வாக்கு சிங்களத்துக்கு.....!!!






உலகத்தமிழினத்தின் முகவரியாய்,,
மண்மூடிப்போன மாவீரர்
கல்லறை நோக்கி..
கொலைக்கரங்கள் குவிகின்றன..!!!
பதவிக்காய் வாக்குக் கேட்டு...
எம்மக்களின் பிணங்களின் மீதேடா
உங்கள் சிம்மாசன போட்டி..!!



புலிகள் உலவிய நிலத்தில்...
இன்று
நரிகளும் நாய்களும்...
எப்படி அனுமதிப்போம்
எமை ஆள....
எம் மனச்சாட்சியில்
இழந்துபோன
இலட்சம் உயிர்களின்
அரசாட்சி!....

 
முள்ளி வாய்க்கால் அவலத்தால்,,
முடிவுரை கண்டேன் தமிழனுக்கு
என்று..
முந்தி முந்தி மோதிவரும்
பந்தயத்தில்
எங்களுக்கென்ன வேலை...!!!

 
முள்வேலி கம்பிக்குள்...
முடங்கிய எம் உறவுகளுக்கு
எத்தனை துயரம், துன்பம்..!!!
இதை
இழைத்தவன் நான், நீ
என்று
முந்தி முந்தி மோதிவரும்
பந்தயத்தில்..
எங்களுக்கென்ன வேலை...!!!

 
துரோகிகளை துணைகொண்டு,,
தூக்கிவரும் பல்லக்கில்
துதிபாடி கூட்டத்தார்...!!
மண்கண்ட பேரவலம் மறையவும் இல்லை...
இரத்தக்கறை காயவும் இல்லை..
எப்படித்தான் கூட்டணியோ???


மொக்கு சிங்களவனில்
சின்னவனோ.. பெரியவனோ
சிந்தனைதான் மாறுமோ?.
சிதைக்க எம்மை சேர்ந்துதான்
வந்தான்-அவன்
ஆடிவரும் காவடிக்கு....
ஆள் பிடிக்க தமிழனா????
அவன் வேண்டுதல் எமை வீழ்த்தவன்றோ?...


வெற்றுத் திருவிழாவில் வேடிக்கை பார்ப்பானேன்..!!!
வெந்து மனம் கொல்வானேன்....!!!
நம் விடியலை தேடும் வேலை இன்னும் முடியவில்லை..
வெற்றி வாகை சூடிவரும் வட்டுக்கோட்டை தீர்மானம்..!!
வென்றெடுக்கும் செய்தி எம்
விடுதலையை விரைவாக்குவோம்...!!!
விடுதலையை விரைவாக்குவோம்...!!!
இதுவே எம்மக்களின் வாக்கு சிங்களத்துக்கு.....


” தோழர் சிவா ”

Thursday, January 21, 2010

ஈழத்தில் தேர்தல் திருவிழா...!!


ஈழத்தில் தேர்தல் திருவிழா களை கட்டி பல நாட்களாகி விட்டன. திருவிழாவிற்கு இன்னும் 5 நாட்கள் தான் உள்ளன.எல்லோரும் 27 ஆம் திகதியை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்..முடிவினை எதிர்பார்த்து...ஆனால் அதற்கு பின் வரப்போகின்ற நாட்களை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருங்கள். ஆம்..!! ஒரு விடயத்தை எல்லோரும் மறந்து விட்டீர்கள்.இந்த திருவிழாவிற்காக சோடணைகள், அலங்காரங்கள் யாவும் கலைக்கப்பட போகின்ற நாட்கள் தான் அவை..!




திருவிழாவினை நடாத்துகின்ற இரு தரப்புமே..வழமைக்கு மாறாகவே.. அலங்காரங்களை அதிகமாகவே அள்ளி அள்ளி அலங்கரித்துள்ளார்கள்.திக்கு முக்காடி போயிருக்கின்றனர் மக்கள்.அதுவும் இங்கே தமிழனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு..?? வழமையாக திருவிழா முடிந்ததுமே உடனேயே சோடணைகளும் கழற்றப்பட்டு விடும்.மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வாரத்திற்கு இருக்கும்.இங்கும் அப்படித்தான்...

இந்த சோடணைகளின் அழகில் மயங்கி திருவிழாவில் தமது தேருக்கு வடம் பிடிப்பார்கள் தமிழர்கள் என்று மனப்பால் குடித்தபடி இரு தேர்க்காரர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.சரி ஒருவேளை தமிழரின் உதவியால் ஒரு தேர் இருப்பிடம் அடைந்தாலும், என்ன சொல்லுவார்கள்..?? ம்ம்ம் தமிழனா??? தமிழன் தேருக்கு குண்டு வைக்கத்தான் வந்தான்.வடம் பிடிக்கவா?? வந்தான்?? எம் சிங்கள மக்கள் தான் இருப்பிடம் சேர்த்தார்கள் என நாளை கொக்கரிப்பான் வெற்றி பெறப்போகும் இந்த இரு காட்டேறிகளில் ஒருவன்..!!!

என்ன செய்ய வேண்டும்???



அதற்காக சிவாஜி ஐயாவுக்கு வடம் பிடிக்கவோ என்று கேட்காதீர்கள்...??? அவர் இப்போது டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி மாதிரி... விளங்கும் தானே... அவர் மகிந்தவின் கையாள் என்று கூறுவதை விட மகிந்தவின் பொறியில் சிக்கிய பலிக்கடா என்றால் பொருத்தமாக இருக்கும்.



எப்படியோ தமிழ் மக்களின் வாக்குகள் மகிந்தவுக்கு இடப்படலாம் அல்லது பொன்சேகாவிற்கு இடப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம், என ஊகித்துக்கொண்ட மகிந்த தரப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக தமிழ் கூட்டமைப்பினை பிளவு படுத்தி, சிவாஜி லிங்கத்தை தன்னிச்சையாக போட்டியிட வைத்துள்ளனர்.


அதாவது, தமிழ் மக்கள் மூலம் மகிந்தவுக்கு வரும் பெரும்பான்மையான வாக்குகள் டக்ளஸ் மூலமாக(யாழில் உள்ள டக்ள்ஸின் அபிமானிகள் மூலம்) வர வாய்ப்பிருக்கும் அதே நேரம் மகிந்தவிற்கு எதிரான வாக்குகளை பொன்சேகாவிற்கு செல்வதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், புறக்கணிக்கப்படும் வாக்குகளை ஒருங்கு சேர்ப்பதற்காகவும் சிவாஜி லிங்கத்தை ஒரு பகடைக்காயாக மகிந்த கூட்டணி நிறுத்தி இருக்கலாம்.



எது எப்படியோ..தமிழன் என்பதற்காகவும், தமிழ் கூட்டமைப்பு என்பதற்காகவும் ஒட்டு மொத்த தமிழர்களும் தமது வாக்குகள் அனைத்தையும் சிவாஜி லிங்கத்திற்கே இட்டாலும் அவர் வெற்றி பெறுவது என்பது எட்டாக்கனியே. இரு சிங்கள வேட்பாளர்களில் ஒருவரே ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளப்போகின்றார்.





”எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது.




இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள்.



இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.”



என்ற நமது தேசியத்தலைவரின் கூற்றிற்கிணங்க..நாம் இந்த இருவரில் யாரையும் நம்பக் கூடாது என்பது முக்கியமானதொன்றாகும்.அத்துடன், சிங்கள இனவாதம் ஒரு போதும் தமிழனையோ, தமிழர் பிரச்சினைகளையோ மதிக்கப்போவதுமில்லை என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.



*கண்டி ஏ9 நெடுஞ்சாலை 24 மணி நேரமும் திறப்பு.

*கொழும்பில் தற்காலிகமாக தங்கி நிற்க பொலிஸ் பதிவு தேவையற்றது என்ற அறிக்கை.

*யாழில் பூரண ஊரடங்கு தளர்த்தல்.

*மீளக்குடியமர்த்துதல் என்ற பெயரில் வன்னியில் சில பிரதேசங்களில் மட்டுமே மக்கள் குடியமர்த்தப்பட்டமை...

*தடுப்பில் உள்ள போராளிகளின் விடுவிப்பு நாடகம்..



தமிழ் மக்களின் வாக்குகளை சுரண்டுவதற்காக, இப்படிப் பல தேர்தல் அலங்கார வேலைகள் இடம்பெற்று, ஒரு போலித்தனமான ஆட்சி தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.



அழகாக கூறின்... “ஆட்டுக்கடா ஒன்றை நீராட்டி, பூமாலை இட்டு, விபூதி சந்தணம் குங்குமம் இட்டு, ஊர்வலமாய் கொண்டு செல்வார்களாம். அந்த ஆடும் குதூகலமாய் ஊரை வலம் வருமாம். அந்த ஆட்டிற்கு தெரியுமா?? பாவி மனிதர்கள் தன்னை வேள்வி என்ற பெயரில் வாள் கொண்டு வெட்டி விருந்துண்ண போகின்றார்கள் என்று..வேள்வி ஒன்றிற்கு முதல் மனிதர்கள் செய்யும் அலங்கார வேலை தெரியாமல் அநியாயமாய் அகப்பட்டு பலியாகி போகின்ற ஆட்டின் நிலை தான் தமிழனுக்கும்...”



இருவருமே கொலை காரர்கள் தான், இனவாதிகள் தான். இருந்தாலும் அனுபவம் கூடிய கொலைகாரனை விட புதுக்கொலைகாரன் பரவாயில்லை அல்லவா? அனுபவமுள்ளவனுக்கு எங்கெல்லாம் சந்து பொந்து இருக்கின்றதென்று தெரியும். பின்னால் தேடி வந்து கழுத்தை நெரிப்பான். தப்பிப்பதற்கும், திருப்பி தாக்குவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காதல்லவா?? இதுவே புதுப்பழக்க கொலைகாரன் என்றால் நாம் சுதாரித்து எழ முடியும்..! ஒரு இடைவெளி உண்டாகும்.



இந்த தேர்தலில் யாரை வெற்றி கொள்ள வைக்கின்றோம் என்பதல்ல எமது நோக்கம், தமிழ் மக்களை பொறுத்த வரை தமிழினப்படுகொலையாளி மகிந்தவையும் அவனது சகோதரர்களையும் தோற்கடித்து, ஆட்சியிலிருந்து இறக்கி வீட்டிற்கு அனுப்பி வைப்பதே மன்னிக்கவும் சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதே எமது முழு நோக்கமாகும்.



மறுபடியும் இதே ஆட்சி தொடர்ந்தால் அடுத்த நான்காண்டிற்குள் ஒட்டு மொத்த தமிழினமும் மண்ணில் புதைந்து போய்விடும்..! பின் யாழ்ப்பாணத்தை சிஹல உறுமய தான் ஆட்சி செய்யும். நாடாளுமன்ற குழு தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் நல்லூரை விகாரையாக்கி அங்கு சரணம் கச்சாமி ஓதியபடி இருப்பார்.

இந்நிலை வேண்டுமா.....????



எது எப்படி ஆயினும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேசங்கள் தமது நோக்கங்களை அடிப்படையாக வைத்து நடாத்தப்பட்டாலும் அதில் தமிழ் மக்களுக்கு எந்தெந்த வழிகளில் நன்மை வரும் என சிந்தித்து தமிழர் செயற்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதே யதார்த்தம். அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இறுதியில் தமிழர்களின் விடுதலைக்கு இந்த சர்வதேச காய் நகர்த்தல்கள் உதவுமா என்பது கேள்விக்குறியே...!!!

சர்வதேசம் என்பது ஒரு மாயை என்பதை புரிந்து கொள்வதோடு மகிந்த அரசிற்கு எதிராக வாக்களித்ததோடு மட்டும் கடமை முடிந்தது என்றிருக்காமல் அதற்குப்பின் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளும் தமிழர்கள் எம் கையிலேயே தங்கி உள்ளது என்பதனையும் நாம் உணர வேண்டும்.



தமிழா...!!

சிந்தித்து முடிவெடுத்து அதன் பின் போராடு...துரோகிகளை அழிக்க,, சொந்த மண்ணில் குடியேற,,,அடிமைத்தனத்தை உடைக்க,, தமிழை நிலைநாட்ட,, தமிழீழம் அமைக்க,,, எமக்கு ஒரு சிறு பாதை வேண்டும்..! அதற்கு முதலில் கொடுங்கோலனை தோற்கடிப்போம்....!! துரோகிகள் தாமாகவே மண்டியிடுவர்..!! வெற்றி எமதே...!!! நம்பிக்கையுடன் எழ வேண்டும்...!!! எழுவோம்..!!!



ஒரு தமிழிச்சி...

தமிழீழத்திலிருந்து....

Sunday, January 10, 2010

இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ...???

அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை




பூத்தது : 10.01.1924

வாடியது : 06.01.2010



வீர மரணம் ஒன்று....
வியப்பாய் நிகழ்ந்து விட...

கைகட்டி வாய்பொத்தி நிற்கும்
கையாலாகாத்தனம் தமிழனுக்கு..

கடைசி வரை முகம் பார்க்கவில்லை...
கண்மணிகள் குரல் கேட்கவில்லை...



உயிர் பிரிந்து விட்ட உடலுக்கு....
உலகம் அஞ்சலி செலுத்தி என்ன???
ஊருக்கு தான் போவதென்ன..???
உற்றார் வந்து பார்ப்பதென்ன...???


பெற்ற பிள்ளைகள் திசைக்கொன்றாகி,,
வளர்த்த வீரர்கள் அருகிலும் இன்றி,,
தோளில் சுமக்க உரிமையோடு..
தூர தேசமதில், சோகமாகி நிற்கும்,,,
எத்தனை எத்தனை உறவுகளின்றி,,
ஐயாவின் இறுதி ஊர்வலம் இன்று....


ஊறணி மயானமதில் இறுதிச்சடங்காம்...
அஞ்சலி செலுத்த கூட அருகதை
அற்றோர் எல்லாம் வருகையாம்...
ஊருலகத்து எம் பி மாரெல்லாம்..

இறுதிச்சடங்கில் பங்கேற்பாம்...
இறுதி வரை இந்த ஜீவன்,,,
இருட்டில் இருந்த போது,,,
எங்குதான் போனீரோ...???
உயிர் பிரியும் நேரமதில்...கூட
என்னதான் நிகழ்ந்ததோ....???


பெட்டியிட்டு, வாகனமேற்றி,,
அனுப்பி வைக்கும் அரசே...!
உன் இனவாதத்திற்கு எல்லையன்றோ...?
தேர்தல் வேள்விக்கு,,,,
எம் தேச பிதாவினை...
பலி கொடுத்து விட்டாயே....!!!


இராணுவ முகாமதனில்,,,,
இருநூறு நாட்களுக்கு மேல்,,
இருட்டினில் வைத்து,
இரக்கம் இல்லாமல்...,,,,
அரக்கத்தனமாய்,,
அநியாயமாய்,, கொன்று விட்டு.....
இன்று பகல் வேஷமிட்டு,,,
பகடு காட்டும் பச்சோந்திகளே...!
பறிக்கப்பட்டது...ஒரு உயிரல்ல...
பல லட்சம் உறவுகளின் உயிர்...!!
தமிழீழ தேசிய தந்தையின் உயிர்..!!

 பூவுலகில்,,
பூத்த நாளிலேயே...
பூமியோடு சங்கமமாகின்ற ஐயாவின்
பூதவுடலுக்கு அஞ்சலிகளை தெரிவித்து,,
வீர வணக்கங்களையும் உதிர்த்துகின்றோம்
எம் வீரத்தந்தையும்,,தேச பிதாவுமான,,,
அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை
அவர்களுக்கு....!!!



ஒரு தமிழிச்சி...

தமிழீழத்திலிருந்து...

Thursday, January 7, 2010

எம் இதயமதில்,,, விதைக்கின்றோம்...!!! வித்துடலை...!!!

உயிரிலும் மேலான,,
உன்னத தலைவனை,,
தாரை வார்த்து கொடுத்த,,
தானைப்பெரியோனே....!!!

உலகமே ,,
உங்களை, வாழ வைக்க காத்திருந்த போதும்,,
உயிரை துச்சமாய் எண்ணி,,
வன்னி மண்ணிலே,,
வாழ்ந்த மாமனிதனே...!!!

எம்மை காத்தருளிய,
எம் தலைவனின்,,
பெற்றோர் உம்மை,
காக்க முடியாப்பாவியானோமே...!

தள்ளாடும் வயதோடும்,,
தாங்கொணாத்துயரோடும்,,
தனி மரமாய் நின்று,,,
தத்தளித்த தெய்வமே...!!!
உங்கள் உடலமதை, தன்னும்,,
உற்று நோக்கி,,
உணர்வுகளை,,
உதிர்த்திட முடியாதோ...??
என்ன கொடுமை இது...!

கண்ணீரையும்,,
கவிதையையும்,,
தவிர வெறென்ன
தர முடியும்??
தற்போது...இந்த
தமிழினத்தால்....

உற்ற துணையோடு,, ஒரு சித்திரவதைக்கூடத்தில்..
ஆறு மாதங்களாய்,,,என்ன துயர் பட்டீரோ ஐயா...
உங்கள் உயிர் பிரிந்த போதிலே...
உங்கள் உதிரங்களை நினைத்தீரோ..??
உருக்குலைந்து பொய் விட்ட,
மண்ணை எண்ணினீரோ..??

தமிழினத்திற்காய்...
அன்றிலிருந்து இன்று வரை...
நீங்கள்,, பட்ட துன்பங்கள் சொல்லிலடங்கா..
அகவை எண்பதிலும்...அரை உயிராய்,,,
அப்பா என்ற உறவை காரணம் காட்டி..
அல்லல் படுத்தினரோ....??
ஆக்கினை தந்தனரோ....??

பொன்னுடலுக்கு, அஞ்சலியாவது செய்திட,,
பொல்லாத சிங்களம்,, இனியாவது தந்திடுமோ?? உம்மை
பொங்கி எழுந்திட, பொருமுகின்றது...நெஞ்சம்..!!!
பொய்யர்களின் கழுத்தை அறுக்க, துடிக்கின்றது..கரங்கள்..!!

விடை பெற்று சென்று விட்ட உத்தமரே...!!
விடுதலை வேட்கை கொண்டு எழுந்திட்ட,
வீரப்புதல்வனை வித்தாக்கிய விருட்சமே..!!
விழுந்து நிற்கின்றோம் ஐயா...இன்று நாம்...
விரைவிலே...உங்கள் தாகம் தீர்ப்போம்...!!!
விண்ணுலகம் நோக்கி....
விரைந்து வரும் ஒரு செய்தி...!!!

பெருந்தகையே....!!!
உங்கள் பூதவுடலுக்கு...
மானசீகமாய்,,
மலர் தூவி,,
கண்ணீரை காணிக்கையாக்கி,,
எம் இதயமதில்,,,
விதைக்கின்றோம்...!!!
வித்துடலை...!!!

தமிழீழத்திலிருந்து   ஒரு தமிழிச்சி...

வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை



தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன் !
தான் வகித்த அரச உயர் பதவியை தூய்மையாக செய்த சேவைச் செம்மல் !
வன்னி முழுவதும் எத்தனையோ இளைஞர் நிலம்பெற்று
தம் வாழ்வை வளமாக்க துணையாக இருந்த தூயோன்.!
எல்லாளன் சமாதிக்கு நாள் தவறாது தீபமேற்றிய திருமகன்
அவர் நினைவாக பிரபாகரன் வர காரணமான பெரியோன் !
இராணுவத்தின் கெடுபிடியை தள்ளாத வயதிலும் சந்தித்தவர்!
எத்தனை துப்பாக்கி எதிர் வந்தாலும் எதிர்த்து பேசும் வீரன்!
கொடுஞ்சிறையில் கிடந்து உயிர் கொடுத்த மானத்தமிழன்..!
வெளியில் வந்தால் இவர் மட்டும் உண்மையை சொலவார் என்று
தள்ளாத வயதிலும் சிங்கள அரசு தடுத்து வைத்த தன்மானப் புலி !
உண்மைக்காக வாழ்பவனுக்கு சிறைக் கூடம் சிறீலங்கா !
என்ற உண்மையை மரணத்தால் எழுதிப் போன மானத்தமிழன் !
சிறையில் உயிர் நீத்து மானம் காத்தான் சேரன் செங்குட்டுவன் அன்று
அவர் வழியில் இன்னொரு சரித்திரம் படைத்தார் இவர் இன்று !
மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவரால் தலை நிமிர்வு பெற்றான்..
கோழையாய் குள்ள நரிகளால் வாழும் தமிழரை
மறுபடியும் ஒரு முறை சிந்திக்க வைத்தார்..
இனவாதப் பேய்களின் முகமூடியை இன்னொருமுறை கிழித்தார்..
பிரபாகரனின் தந்தை புகழ் மிக்க தமிழன் என்ற பெருமை தந்தார்..
இறப்பு துயரல்லடா உன் செயலே துயரென்று
சிங்களத்திற்கு சொல்லாமல் சொல்லிப் போனார்..
சிங்கள இனவாத நாயிடம் பிச்சை கேட்டு வாழாது
பெரு மரணம் கண்டு தமிழ் மானம் காத்தார்..
உனக்கு மகனாகப் பிறந்த பெருமையே பிரபாகரனுக்கு பெரிது
தள்ளாத வயதிலும் தளராத தமிழ் வீரன் நம் தாத்தா என்று
உன் புகழை எதிர் காலம் போற்றும்..
பயங்கரவாதம் பேசும் உலக நாய்களே இவர் மரணத்தால்
உங்கள் ஊன் நாற்றமெடுக்கிறது !
பாரத மாதாவே உன் தவப்புதல்வரா நாம்
நினைக்க நாறுகிறது நம் மனம்..
இவர் சிறையில் மரணிக்கும்வரை
மௌனம் காத்த உலகத்தின் கல்லறையில் கல்லறையில்
ஒரு தமிழன் உயிர் பெற்றார் என்று எழுதுங்கள்..
இவர் மரணம் மரணமல்ல
உலகிற்கு நாகரிகம் சொன்ன சங்கத் தமிழனின் மானம்
அவர் மரணத்தில் வீசுகிறது..
போரின் பின் வாடிய முல்லைப் பூக்கள் மறுபடி பூக்கின்றன
கொட்டும் மல்லிகைப் பூக்கள் இவர் பாதங்களை தழுவுகின்றன..
சங்ககால வீர மரணம் தமிழீழத்தில் மறுபடி எழுகிறது..
உங்கள் இறப்பாவது இந்த மானங்கெட்ட உலகிற்கு
ஒரு மரியாதை தரட்டும் !
போய் வா !
புறநானூறு உன் புகழ் பாடும் !
கிழப்புலியே உனக்கு வீர வணக்கம் !
விலை போனவன் போகட்டும்
மானமுள்ள தமிழர்கள் பூமியில் உள்ளவரை
உன் புகழ் முல்லைப்பாட்டாய் மணம் வீசும்..
உன் மகனின் புலிக்கொடி உங்கள் உடலை மூடட்டும்..
தமிழனுக்கு தன்மானம் தந்தவனே போய்வா !
வீர வணக்கம்.